தெலுங்கில் முன்னணி நாயகியாக இருந்துவந்த இலியானா கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். பொதுவாகத் தென்னிந்திய நடிகைகள் இந்திக்குப் படையெடுப்பது வழக்கம். அதற்கு இலியானாவும் விதிவிலக்கல்ல. பர்ஃபி எனும் படம் மூலம் இந்தியில் நுழைந்த இலியானா அதற்குப்பின் தெலுங்குப் பக்கம் வரவேவில்லை.
இந்த நிலையில், சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமர் அக்பர் ஆண்டனி எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பியுள்ளார் இலியானா. ரவிதேஜா நாயகனா நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கியுள்ளார். வரும் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக சமீபத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகை இலியானா பேசும்போது, “கடந்த 2012ஆம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் ‘தேவ்டு செசினா மனசுலு’ என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடித்துத்தரும் என்று நம்புகிறேன். ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்தப் படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
மேலும், இந்தப் படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியது பற்றி பேசும்போது, “இந்தப் படத்துக்கு நீங்கள் தான் டப்பிங் பேச வேண்டும் என்று இயக்குநர் ஸ்ரீனு வைட்லா அன்பு கட்டளையிட்டார். இதெல்லாம் அவர் மீதுதான் தவறு. ஆனால், இது ஒரு நல்ல அனுபவம். நான் சரியாகச் செய்திருக்கிறேனா, இல்லையா என்பதை இயக்குநரும், ரசிகர்களுமே சொல்ல வேண்டும்” என்று கூறியவர், இதனோடு படத்தில் ரவிதேஜாவின் சிக்ஸ் பேக் பற்றி ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தகவலையும் போட்டு உடைத்துவிட்டார் இலியானா.
Discussion about this post