முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பிலிருந்து சந்தேகம் எழுப்பப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,”ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார். இந்தப் பேச்சு சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று (நவம்பர் 10) அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், “சர்க்கரை வியாதி இருந்த ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து எதையெல்லாம் கொடுக்கக் கூடாதோ அதையெல்லாம் கொடுத்து சர்க்கரை அளவை உயர்த்தினர். ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரைக் கொலை செய்த கும்பல்தான் தினகரன் கும்பல். தன் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்கக் கோரி கருணாநிதியிடம் கெஞ்சியவர்தான் தினகரன். இவர்களின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டு அதிமுக தொண்டர்கள் அவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்னதாகப் பேசிய சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்” என்று குறிப்பிட்டார்.
Discussion about this post