தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதியில் அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கோவையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. துரோகி தினகரன்தான். அதிமுகவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் அவர்தான்” என்று தெரிவித்திருந்தார்.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் நேற்று (நவம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், முதல்வரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “யார் துரோகி என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். சாப்பிட்டு கழுவிய கை காய்வதற்கு முன்பே தன்னை முதல்வராக்கியவருக்குப் பதவி வெறியில் துரோகம் செய்துவிட்டு, வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் யார் செய்வது என்பதும் அவர்களுக்குத் தெரியும். துரோகி யார் என்பதை வரும் காலத்தில் நடைபெறும் தேர்தல் அவர்களுக்கு வெளிப்படுத்தும்” என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மறையும்போது பன்னீர்செல்வத்தையோ, எடப்பாடி பழனிசாமியையோ முதல்வராக்கிவிட்டுச் சென்றாரா என்று கேள்வி எழுப்பிய தினகரன், “எடப்பாடி பழனிசாமி சசிகலாவால்தான் முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 2017 பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும். எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் அவருக்கு வேண்டியவர் ஆகிவிட்டார். அவர்களுக்குத் தமிழக மக்கள் உரிய நேரத்தில் உரிய பதிலைத் தருவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post