ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்’. படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது. அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 6 நாட்களில் சர்கார் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சந்திப்பு நடந்தது.
இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post