விஷ்ணு விஷாலும் நடிகர் கே.நட்ராஜின் மகள் ரஜினியும் கல்லூரியில் படிக்கும் போதே நட்புடன் நான்கு ஆண்டுகள் பழகிவந்தனர். நட்பு காதலாகி 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆர்யன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஒரு ஆண்டுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்தனர். தற்போது சட்ட ரீதியாக விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தகவலை விஷ்ணு விஷால் இன்று மதியம் (நவம்பர் 13) வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினியும் நானும் ஒரு ஆண்டுக்கும் மேலாக தனியாக இருந்தோம் இப்போது விவகாரத்து பெற்றுள்ளோம். எம் மகனுக்கு சிறப்பானதை வழங்குவதற்கு தான் இருவரும் எப்போதும் முக்கியத்துவம் அளிப்போம். இருவரும் இணைந்து சில ஆண்டுகள் அருமையாக வாழ்ந்தோம். நல்ல நண்பர்களாக ஒருவருக்கொருவர் மரியாதை அளிப்போம், எங்கள் நட்பு தொடரும்” என்று கூறியுள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. ஜகஜால கில்லாடி திரைப்படம் உருவாகி வருகிறது.
Discussion about this post