வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இதையடுத்து, புயல் மூன்று முறை திசை மாறியது. தற்போது, நவம்பர் 15ஆம் தேதி பாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை நிலவரப்படி கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு கிழக்கே – வடக்கே 850 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் வலுப்பெற்று இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், புயலின் வேகம் குறைந்தால், அது கரையை கடக்க தாமதமாகும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறுவதால் கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம். சில பகுதிகளில் 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயார்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் இன்று (நவம்பர் 13) சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம். கஜா புயல் தற்போதுவரை 3 முறை திசை மாறியுள்ளது. அதனால், புயல் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். புயல் பற்றிய தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றத் தேவையான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்ட இடங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை குறித்துக் கடலோர மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 236 மருத்துவக் குழுக்களும் மரம் அறுக்கும் இயந்திரங்களும்,ஜேசிபி இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை அரக்கோணத்திலிருந்து 25 தேசியப் பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர். அதுபோன்று, பேரிடர் குழுவினர் புதுவை,நாகைப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாகச் சென்றுள்ளனர்.
ரெட் அலர்ட் வாபஸ்
கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்கில் நகருவதால் ஆந்திராவில் ரெட் அலர்ட் திரும்பப் பெறபட்டது. கேரள மாநிலத்துக்கு நவம்பர் 16ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை, ரெட் கலர் கோட்தான் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post