கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்து ஆதரவுடன் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். தென்மாவட்டங்களில் நிலவும் ஜாதிய கொடுமைகளை தோல் உரித்து காட்டும் வகையில் காட்சிஅமைப்புகளும் திரைக்கதையும் பரியேறும் பெருமாள் படத்திற்கு பலம் சேர்ப்பவையாக இருந்தன. மேலும் இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கமும் பரவலாக பேசப்பட்டது.
பரியேறும் பெருமாள் திரைப்படம் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.இந்த நிலையில் பரியேறும் பெருமாளை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதையுடன் தனுசை இயக்குனர் மாரி செல்வராஜ் சந்தித்துள்ளார். கதையை கேட்டு பிரமித்து போன தனுஷ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் தயாரிப்பாளரான இயக்குனர் ரஞ்சித் நடிகர் தனுசுக்கு பரியேறும் பெருமாள் படத்தின் சிறப்பு காட்சியை காட்டியுள்ளார். பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து பாராட்டிய தனுஷ் சூட்டிங்கிற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார். அத்துடன் தனுஷ் கால்ஷீட்டை ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கலைப்புலி தாணு படத்தை தயாரிக்க உள்ளார்.
இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு மாரி செல்வராஜ் – தனுஷ் இணையும் படத்தின் வேலைகள் தொடங்கும். இதனிடையே பரியேறும் பெருமாள் படத்தின் கதையே நடிகர் தனுசை மனதில் வைத்து தான் மாரி செல்வராஜ் உருவாக்கி இருந்தார்.
ஆனால் பல முறை முயன்றும் தனுசை சந்திக்க முடியவில்லை என்பதால் கதிரை வைத்து படத்தை முடித்தார். மேலும் பல முறை முயற்சித்தும் தனுஷ் நிழலை கூட நெருங்க முடியவில்லை என்று கூறியிருந்த மாரி செல்வராஜ் தற்போது தனுசுடன் இணைந்து படம் இயக்க உள்ளார்.
Discussion about this post