திகில் காட்சிகளுடன், சென்டிமென்ட், காமெடி, நடனம் ஆடவைக்கும் படியான பாடல்கள் ஆகியவற்றை இணைத்து தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
நடன இயக்கம், நடிப்பு, இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் இவர் இயக்குநராக அறிமுகமானது முனி படத்தில் தான். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அதே பாணியில் அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி நடித்து வருகிறார். ஹாரர் படங்கள் என்றாலும் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, ஆகிய படங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாகியிருந்தன. குழந்தைகள் முணுமுணுக்கும்படியான பாடல்களை லாரன்ஸ் கட்டாயம் இடம்பெறச் செய்துவருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து காஞ்சனா 3 படத்தை தற்போது இயக்கிவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக முனி படத்தில் நடித்த வேதிகா மற்றும் பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். ராகவா லாரன்ஸ் சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் தொடர் விடுமுறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் உள்ளது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Discussion about this post