சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த எந்திரன் 2010ஆம் ஆண்டு வெளியானபோது தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திரைகளில் அப்படம் திரையிடப்பட்டது. பெரிய நடிகர்கள் நடித்த எந்தப் படமும் வெளிவராத காரணத்தால் தியேட்டர்கள் எந்திரன் படத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே சூழலை சன் பிக்சர்ஸ் இந்த ஆண்டு தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு ஏற்படுத்தி வெற்றி கண்டது.
தமிழகத்தில் 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்த சர்கார் 600 திரைகள் வரை திரையிடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு புதுப் படம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களால் சர்கார் படத்தை கடந்து வேறுபடம் பார்க்கும் சூழலை உருவாக்க விடவில்லை சன் பிக்சர்ஸ்.
பிரம்மாண்டமான விளம்பரங்கள், படத்திற்கு எதிரான ஆளும் அதிமுகவின் போராட்டம் இவை அனைத்தும் சர்கார் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியன. முதல் நாள் மட்டுமல்ல நேற்று வரை சட்டத்துக்கு புறம்பாக அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
படத்திற்கு ஆதரவாக, எதிராகப் பேசியவர்கள் கட்டணக் கொள்ளையைப் பற்றிப் பேசவில்லை. உலகம் முழுவதும் சர்கார் 200 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அதற்குப் பின் உள்ள சட்ட மீறலை, கட்டணக் கொள்ளையை எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் சர்கார் தீபாவளி அன்று ரூ.30.68 கோடியும் இரண்டாம் நாள் ரூ.22.18 கோடியும் மூன்றாம் நாள் ரூ.10.68 கோடியும் நான்காம் நாள் ரூ.9 கோடியும் ஐந்தாம் நாள் ரூ.9.80 கோடியும் 6ஆம் நாள் ரூ12.25 கோடியும், 7ஆம் நாள் ரூ8.5 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வசூல் விபரங்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தவிர்த்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் சர்கார் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் ரஜினிகாந்த், விஜய் நடித்த படங்களின் முந்தைய சாதனைகளை சர்கார் வசூல் முறியடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் 6 முறை 100 கோடி வசூல் சாதனை புரிந்த தமிழ் நடிகர் எனும் சிறப்பு அந்தஸ்தை விஜய் அடைந்துள்ளார். துப்பாக்கியில் தொடங்கி கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் என விஜய் நடித்த ஆறு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. முன்னதாக தமிழில் நடிகர் ரஜினிகாந்த், 5 முறை 100 கோடி வசூல் படங்களை கொடுத்து முதல் இடத்தில் இருந்தார். அந்த சாதனையை நடிகர் விஜய், சர்கார் படம் மூலம் முறியடித்து உள்ளார்.
இப்படத்தின் வியாபாரம், அதிக திரைகளில் திரையிடும் சூழலை உருவாக்கியது, பிற படங்களை ஓரங்கட்டியது, டிக்கெட் விற்பனையில் விதிமீறல் இவை அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு மோசமான விளைவுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். சிறு பட தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்ட நடிகர்களையும் தொழில் செய்ய முடியாத சூழலை உருவாக்கும். குறிப்பிட்ட சில நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்தால் போதும் என்ற நிலைமைக்குத் தயாரிப்பாளர்கள் ஆளாக நேரிடலாம்.
Discussion about this post