கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை விளக்கும்படியான இரு போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. முறுக்கு மீசையில் வேட்டி சட்டை அணிந்த அவரது தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பேட்ட படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் என பல கதாநாயகிகள் நடித்திருப்பதால் யார் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது என்ற கேள்விக்கு இந்த போஸ்டரே பதில் கூறியுள்ளது. பூக்களை கையில் வைத்துக்கொண்டு சிம்ரனுடன் ரஜினி நடந்துவரும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.
பேட்ட படத்தின் வெளியீடு எப்போது என்பது கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி 2.O படம் ரிலீஸ் ஆவதால் 45 நாள்கள் இடைவெளியில் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படமும் திரைக்கு வர இருப்பதால் பேட்ட படத்தின் ரிலீஸ் கோடை விடுமுறைக்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மூலம் பொங்கலுக்கு படம் வெளியாவதைப் படக்குழு உறுதிசெய்துள்ளது.
சென்னை, மேற்கு வங்கம், லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளை கவனித்து வருகிறார்.
Discussion about this post