நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு ரூ.35 கோடி மதிப்பில் இதய அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.40 லட்சம் மதிப்பில் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அமர்வதற்கான நவீன அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை ஆகியவற்றை முதல்வர் திறந்துவைத்தார். மேலும், 1 கோடி ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான நினைவு அஞ்சல் அட்டையையும் வெளியிட்டார்.
விழாவில் பேசிய முதல்வர், “பிறந்த குழந்தைகளுக்கு இன்றைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ஒரு உயர்தர மருத்துவமனையை நம் தமிழகத்திலே பெற்றிருக்கின்றோம். 837 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கின்றது” என்று குறிப்பிட்டார்.
“பெற்ற தாய்க்குத்தான் அந்தக் குழந்தையின் அருமை தெரியும். பிறந்த உடனேயே அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டால் மனம் உடைந்துவிடும். ஆகவே, அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்த தாய்மார்கள் பிரசவிக்கின்ற குழந்தைகள் நலமோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அம்மாவினுடைய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நவீன கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடையக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்” என்றும் தனது பேச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட முதல்வர், திடீரென அங்கிருக்கும் அம்மா உணவகத்துக்குச் சென்றார். அங்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டார். உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் அறிவுரை கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து புறப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அம்மா உணவகத் திட்டத்தை தமிழக அரசு சரிவர செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தினகரன் உள்ளிட்டோரும் அரசை விமர்சித்திருந்த நிலையில், அம்மா உணவகத்திற்கு நேரடியாகச் சென்று முதல்வர் உணவருந்தியுள்ளார்.
Discussion about this post