சினிமாவுக்கும், அரசியலுக்கும் உள்ள தொடர்பென்பது விஜய் படங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்குமான மோதலைப்போல அவ்வளவு தொடர் நெருக்கமானது எனலாம். சினிமாவை மையமாக வைத்து அரசியலில் என்ட்ரி ஆவதும், அரசியலில் வலுவாகக் காலூன்றிய பின்னர் புதிய சினிமா ஆளுமைகளை அரசியல் பக்கம் வரவிடாவண்ணம் அந்தக் கட்சிகளே கவனித்துக்கொள்வதும் தென்னிந்திய சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து நிகழ்கிறது எனும் குற்றச்சாட்டு காலம்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாகவே பல கட்சிகளின் செயல்பாடுகளும் இருந்துவருகின்றன.
சமீபத்தில் எடுத்துக்கொண்டால் சினிமாவை மையமாகக் கொண்ட கமல், அரசியல் எதிர்ப்புகளை மீறி ‘மய்யமாக’த் தனது கட்சியைத் தொடங்கினார். அரசியலுக்கு வருவதாகக் கூறினாலும், தனது ரிலீஸ் படத் தேதிகளை மட்டுமே தொடர்ந்து அறிவித்துவரும் ரஜினி, இதுவரை அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்கவேயில்லை. விஜய்யைப் பொறுத்தவரை, தனது படங்களில் வசனம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளும் அவர், அரசியலுக்கு ஆழம் பார்க்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவர்களுக்கு அடுத்து அந்த அரசியல் ரேஸில் ஓடக் காத்திருப்பவர் நடிகர் விஷால். தான் போட்டியிட்ட எல்லா சினிமாத் தேர்தல்களிலும் வெற்றி வாகையையே சூடியுள்ள அவர், அரசியலிலும் வெற்றியைப் பெறலாம் எனும் நோக்கில் தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் களமிறங்கிய அவர் கடைசி நேரக் குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார். அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும் விஷாலுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. அதன் பின்னர் எந்தத் தேர்தலும் வரவில்லையென்றாலும் அதிமுகவுக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருவதாகவே பலரும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, அதிமுகவைச் சீண்டுவதுபோல அமைந்துள்ளது. அந்த வகையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ டிவியாக நியூஸ் ஜெ எனும் செய்திச் சேனல் நேற்று (நவம்பர் 14) தொடங்கப்பட்டது. அதே நாளில்தான் நடிகர் விஷால் இப்படியாகக் கருத்து கூறியுள்ளார். எனவே, அதிமுகவைத்தான் விஷால் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் எனும் பேச்சு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ளது.
Discussion about this post