இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்க மறுப்பதாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் அறிவித்தனர். இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவு உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர். அப்போது உரையாற்றிய ராஜபக்சே, நான் சிறு வயதிலிருந்தே நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். மந்திரி பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்ட ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் மீது குப்பை தொட்டியை தூக்கி எறிந்தனர்.
அவரது பேச்சை ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்புமும் நிலவி வருகிறது. இருதரப்பு எம்.பி.க்களும் ஒருவரையொருவர் திட்டியும், மிரட்டியும் கைகலப்புக்கு தயாராகி வருவதால் நாடாளுமன்றம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
Discussion about this post