நேற்றிரவு (நவம்பர் 14) புதுவையில் இருந்து சென்னை நோக்கி ஹோண்டா சிட்டி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடியில், சென்னையிலிருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது அந்த கார் மோதியது. இதில், காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி என்பதும், மற்றொருவர் பெரம்பூரைச் சேர்ந்த சதீஷ் என்பதும் தெரியவந்துள்ளது. மற்ற 3 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தினால், தனியார் பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கடலூர் திரும்பியவர்கள் ஆவர்.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பலியானவர்களின் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்தனர். தமக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த வேண்டும் என அதிவேகத்தில் செல்ல முயன்றபோது, அந்த கார் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர் பேருந்தில் பயணித்தவர்கள்.
Discussion about this post