கஜா புயல் எதிர்பார்த்தது போல வலு குறையாது மணிக்கு 100 கி.மீ., முதல், 120 கி.மீ., வரையான வேகத்தில் காற்று வீசியபடி இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வு அமைப்பான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த புயலை, ‘வர்தா’ புயலுடன் ஒப்பிடலாம். நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் அவற்றின் அருகே உள்ள தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீச கூடும். புயல் முழுமையாக கரையை கடக்க நான்கு மணி நேரமாகும். என தெரிவித்துள்ளது.
துவக்கத்தில் திருவாரூர் மாவட்டத்தில் தான் பலமான காற்று வீச துவங்கும். டெல்டா பகுதிகளில் இதற்கு முன் கடந்த புயல்களை ஆய்வு செய்து பார்த்தால், கனமழை பெய்து இருப்பது தெரிய வரும். இந்த முறையும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும். ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விருதுநகர், கோவை, வால்பாறை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. என வெதர்மேன் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post