கஜா புயல் கரையை கடக்கும் போது 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்படைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக மொத்தமாக 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
6 மாவட்டங்களில் உள்ள 421 பாதுகாப்பு முகாம்களில் 81, 948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் என மின்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மழை மற்றும் புயல் சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளார்.
Discussion about this post