சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, மறு சீராய்வு மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் இவ்வழக்கை விசாரிக்கும் என்றும் அதுவரை அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், கார்த்திகை மாத மண்டல பூஜையையொட்டி நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இதனால், சபரிமலை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘நானும் என்னுடன் 6 பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு கண்டிப்பாக போவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது’ என்று பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கூறியிருந்தார். வருகிற சனிக்கிழமை அன்று அய்யப்பனை தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது
Discussion about this post