இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்திருக்கும் படம் ‘காற்றின் மொழி’. இந்தியில் வித்தியாபாலன் நடித்து வெளிவந்த ‘தும்ஹரி சுலு’ என்ற படத்தின் தமிழ் ரிமேக்காகும். இப்படத்தினை தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார்.
ஆடம்பரமான அபார்ட்மெண்ட்ஸில் வசிக்கும் நடுத்தரக் குடும்பம் ஜோதிகாவுடையது. ஒரு டெய்லரிங் கம்பெனியில் வேலை பார்க்கும் கணவர் விதார்த். 11 வயது பையன் கொண்ட குடும்பம். கணவன், மகனுக்குப் பணிவிடை செய்ததுபோக பெண்புறா ஒன்றுடன் பேசிப்பொழுதைக் கழித்துக்கொண்டிருப்பார்.
ஜோதிகாவுக்கு திடீரென ஒரு எஃப்.எம். ரேடியோவில் ஆர்.ஜே. வேலை கிடைக்கிறது. விஜயலட்சுமி என்ற பெயரை மதுவாக மாற்றி ராத்திரி நேரத்து ரசிகர்களுக்கு அந்தரங்க ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி. அந்த வேலையை ஜோதிகா ரசித்துச் செய்தாலும் கணவருக்கு, ஜோவின் அப்பா, அக்காக்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. குடும்பத்தில் சின்னதாக குழப்பம் ஏற்பட பின்னர் அதிலிருந்து எப்படி மீண்டு எப்படி கரைக்கு வந்தார்கள் என்பதே கதை.
எஃப்.எம்.மின் அட்மினாக வரும் லட்சுமி மஞ்சு அல்டிமேட் சாய்ஸ். மற்றும் ராதாமோகனின் கம்பெனி ஆர்டிஸ்டுகளான குமரவேல், எம்.எஸ். ஸ்கர்,மயில்சாமி ஆகியோர் வழக்கம்போல் முத்திரை பதிக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் இரண்டு நிமிட காட்சி யூ டியூபில் வெளியாகியுள்ளது.
Discussion about this post