பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது.
10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்துடன் மோதியது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து கேப்டன் லாரா டெலனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு மிதாலி ராஜூவும், மந்தனாவும் அருமையான தொடக்கத்தை கொடுத்தனர். மிதாலிராஜ அரைசதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி, இந்திய சுழல் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இந்திய தரப்பில் 6 வீராங்கனைகள் சுழற்பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இசோபல் ஜாய்ஸ் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு அரைஇறுதிக்கும் முன்னேறியது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே நியூசிலாந்து, பாகிஸ்தானையும் இந்தியா வென்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைவது இது 3-வது முறையாகும்.
Discussion about this post