அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வரும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல பெரியாரின் சிலையும் அகற்றப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையாகவே தனது அட்மின் பதிவிட்டார் என்று விளக்கம் அளித்தார்.
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார் ஹெச்.ராஜா.
இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார் ஹெச்.ராஜா, அரியலூர் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈவேரா பற்றியும் மணியம்மை பற்றியும் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? யோசிக்க வேண்டாமா? ஒரு நீதிபதி கேட்கிறார், பள்ளிக்கூட குழந்தைகள் வயதானவரையும், கல்யாணம் ஆனவர்களையும் ஏன் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள்? இதை அரசாங்கம் தடுக்க என்ன செய்திருக்கிறது? என்று கேட்கிறார்.
இதையெல்லாம் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டாலே சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அவதூறாக விமர்சித்துள்ளார்.
Discussion about this post