திரைத்துறையில் வலம்வரும் பெரும்பாலான பெரிய நட்சத்திரங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகவோ அல்லது பங்குதாரராகவோ தியேட்டர்களும் இயங்குவதுண்டு. அந்த லிஸ்ட்டில் தற்போது இணையவுள்ளார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபு.
அந்தவகையில் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை ஹைதராபாத்தில் மகேஷ் பாபு நிறுவ உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி, ஏஎம்பி சினிமாஸ் எனப் பெயரிடப்படவுடள்ள இந்தத் திரையரங்கில் முதல் படமாக ஆமிர் கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தானை வெளியிட்டு துவக்க விழாவிற்கு ஆமிர் கானை வரவைக்க ஏற்பாடு நடந்துள்ளது. ஆனால், ஆமிர் கான் பிஸியாகவே இருக்கவே அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பிரமாண்டமான ஒரு துவக்கத்திற்காக சரியான தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு ரஜினியின் 2.O படம் தற்போது கையில் கிடைத்துள்ளது. அந்தவகையில் ரஜினியின் இந்தப் படமே அந்தத் திரையரங்கினில் முதல் படமாக வெளியிடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய ரசிகர் படையைக் கொண்டவர் மகேஷ்பாபு. அவர் ஆரம்பிக்கவுள்ளதால் இயல்பாகவே இந்தத் திரையரங்கைக் காண கூட்டம் கூடும். அதுபோலவே, இந்த ஆண்டின் பிரமாண்ட பட்ஜெட் படமாகக் கூறப்படும் 2.Oவே இதில் முதல் படமாக வெளியாகவுள்ளதால் நிச்சயம் இது கூடுதலான ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுத்துவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post