பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் டிரெய்லர், இப்படம் ஆக்ஷன் படமாக அமையும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கும் பிரசாந்துக்கு இந்தப் படம் கைகொடுக்குமா என்னும் கேள்வி ஜானி படத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
90களில் முக்கியமான கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். சில ஆண்டுகளாகப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்தார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான சில படங்களும் வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜானி. இயக்குநர் ஜீவா ஷங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரசாந்துடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் தியாகராஜன் தயாரித்துள்ளார்.
ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை பிரசாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக ஜானி உருவாகி இருப்பதை டிரெய்லரைப் பார்க்கும்போது அறிய முடிகிறது.
2007ஆம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’.போலீஸ் அதிகாரிகள், காணாமல் போன பணத்தைத் தேடி போகும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ஜானி.
Discussion about this post