கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நந்தீஷ் (வயது 25). ஓசூரில் மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபகுதியில் மாற்றுச் சமூகத்தை சேர்ந்த சுவாதியை, நந்தீஷ் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கு, வழக்கம் போல சாதி பெரும் தடையாக வந்தது. இதனால், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறிக் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று, சூளகிரியில் தங்களின் காதல் திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்தனர். சுவாதி வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். இந்தக் காதல் திருமணத்தை ஏற்காமல் சுவாதியின் பெற்றோர் கடுமையான கோபத்தில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
நவம்பர் 10ஆம் தேதியன்று சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வேங்கடேசன், சித்தப்பா உள்ளிட்டோர், நந்தீஷ் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களாக நந்தீஷ், சுவாதி ஆகிய இருவரையும் காணவில்லை என நந்தீஷின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர் போலீசார். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஜலஹள்ளி பகுதி காவிரி ஆற்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்தத் தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஓசூரைச் சேர்ந்த நந்தீஷ், சுவாதி இருவரும் சடலமாகக் கிடைத்தது உறுதி செய்யப்பட்டது. நந்தீஷ், சுவாதியின் உடல்களில் பலத்த காயங்கள் இருந்ததோடு, அவர்களது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. இரு சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த காதல் ஜோடியை கொடூரமாக கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக; இயக்குனர் ரஞ்சித் கண்டன அறிக்கை வெளியிட்டது மட்டுமல்லாமல் நேரடியாக போராட்டத்தில் குதித்துள்ளார்.
உலகத்திலே கேவலமான வன்மம் ஜாதிய வன்மம் தான். இதுவரை நம்நாடு எத்தனையோ ஆணவக்கொலைகளை கண்டிருக்கிறது. கெளரவம் என்ற இல்லாத ஒன்றை இருப்பதாய் ஊட்டப்பட்ட வெறியை உள்ளுக்குள் ஏற்றிக்கொண்டு பல மிருகங்கள் நாடெங்கும் வலம் வந்து அப்பாவி இளம் ஜோடிகளை வதம் செய்து வருகிறது.
இதற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் குரல் தான் முதலில் ஒலிக்கிறது. தற்போது கிருஷ்ணகிரியில் ஒரு இளம் ஜோடியை கொலை செய்திருக்கிறார்கள் ஜாதி வெறியர்கள். இதைக்கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் “தமிழக அரசே உடனடியாக ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்று” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்த ஆணவக்கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Discussion about this post