ஆளும் அதிமுக அரசை விமர்சித்துப் பல குரல்கள் திரையுலகம் பக்கம் இருந்து கேட்கத் தொடங்கியுள்ளன. திரையுலகில் இருந்து அரசியல் பக்கம் நகர்ந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிரான சில விமர்சனங்களை வைக்கின்றனர்.
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததாகக் கூறி அதிமுக அமைச்சர்கள் விஜய்யை விமர்சித்தனர். ஆனால் விஜய் அந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்துதெரிவிக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட முயன்ற விஷாலும் அதிமுகவை விமர்சித்துவருகிறார்.
அவர் அண்மையில் அதிமுகவுக்காக தொடங்கப்பட்டுள்ள நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கின்றேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார். நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த அடிப்படையும் தெரியாமல் நடிகர் விஷால் பேசி வருகிறார், தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் கூட வழிமுறைகள் தெரியாமல் ஆர்.கே.நகரில் பெற்ற அனுபவத்தை மறந்து பேசுகிறார். இது விஷாலுக்கு நல்லதல்ல” என்று கூறியுள்ளார்.
Discussion about this post