விருதுநகரில் ஒரு சாதாரண கான்ஸ்டபிளாக வாழ்க்கை நடத்தும் முருகவேலுக்கு (விஜய் ஆண்டனி), தன் தம்பி ரவியை எப்படியாவது படிப்பின் வழியாக வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்கிறார். அண்ணனின் ஓவர் சென்டிமென்ட்டான ஒழுக்க போதனைகளால் வெறுப்பான தம்பி ஊரைவிட்டு ஓடுகிறார். சென்னையில் தவறான வழியில் சென்று கொலைக் குற்றவாளியாகிறார். நீதி, நேர்மை, நியாயம் என்ற கொள்கையுடன் எஸ்.ஐயாகப் பதவி உயர்வு பெற்று சென்னை வரும் விஜய் ஆண்டனி இதை எல்லாம் அறிந்ததும், ஓர் இக்கட்டான முடிவெடுக்கிறார். அதன் பின்பு தன் தம்பி போல் பலரையும் தனது சுய லாபத்துக்காகப் பயன்படுத்தும் தலைவன் மீசை பத்மாவை (தீனா) அழிக்க நினைக்கிறார். அது எப்படி நடக்கிறது, அந்தத் தலைவன் யார் என்ற கேள்விகளுக்கு விடையாக அமைகிறது திமிரு பிடிச்சவன் திரைப்படம்.
எதனால் சிறுவர்கள் கெட்ட வழிக்குப் போகிறார்கள், அதற்குப் பெற்றோர்களின் பங்கு எந்தளவில் உள்ளது, ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், காவலர்கள் மீதான மக்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது, அந்தப் பார்வையை மாற்ற காவலர்கள் என்ன செய்ய வேண்டும், காவலர்கள் அடையும் துயரங்கள், சமூகத்தில் உள்ள வர்க்க பேதங்கள் போன்ற கருத்துகளை முன்வைத்து இயக்குநர் கணேஷா சுவாரஸ்யமாகக் கதை சொல்ல முயன்றுள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். தம்பி மீதான பாசத்திலும் போலீஸுக்கே உரிய கம்பீரத்திலும் கவனம் ஈர்க்கிறார். சாக்கடையைச் சுத்தம் செய்வதில் ஆரம்பித்து மக்களின் அபிமானம் பெற எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், இன்சோமேனியா எனும் தூக்கமின்மை வியாதியால் அவதிப்படும்போதும் விஜய் ஆண்டனி நடிப்பில் கவர்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக வரும் நிவேதா பெத்துராஜ் தனது துருதுரு நடிப்பாலும், கண்கலங்கும் காட்சி ஒன்றில் கூலிங்கிளாஸ் அணிந்து திரும்பும் இடத்திலும் மனதில் பதிகிறார்.
இதுவரை பல வில்லன்களுக்கு அடியாளாக நடித்துவந்த சாய் தீனா, இந்தப் படத்தில் பிரமோஷன் ஆகி தனி வில்லனாக நடித்திருக்கிறார். அடியாளாக வந்தாலே தோற்றத்திலும் பேச்சிலும் மிரட்டுபவர், தனி வில்லன் வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடுவாரா? மிரட்டியிருக்கிறார்.
ஜாக் ராபின், நிக்சன், சாய் ராகுல், கிச்சா ஆகிய சிறுவர்கள் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர். ஆதிரா, தேவராஜ், முத்துராமன், சம்பத், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
பக்கா மாஸ் ஹீரோவாகக் களம் இறங்கியிருக்கும் விஜய் ஆண்டனி, திடீரென்று கடவுளாகத் தோன்றி, கெட்டவர்களை வதம் செய்யுமிடம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான். இந்து மதத்தைப் போற்றும் இயக்குநருக்கு கிறிஸ்துவர் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.
பாலியல் தொழிலாளர்களின் வலியையும் திருநங்கைகளின் உணர்வுகளையும் கையாண்ட விதத்திலும் அதைக் காட்சிப்படுத்திய இடங்களிலும் இயக்குநர் ஒரு படிமேல் போய் நிற்கிறார். “ஆணாக இருக்குற ஒருத்தரு, பெண் உணர்வு வந்ததும் பூ, பொட்டு வைச்சுட்டு வாழுறதுக்கே தைரியம் வேணும். அதனால்தான் தைரியத்துக்கு திருநங்கைகளை நினைச்சுக்குவேன்” என்பது போன்ற வசனங்கள் மிளிர்கின்றன.
ஒரு காட்சியில் நடைபாதையில் வசிக்கும் தம்பதிகள் கூடலில் ஈடுபடுகிறார்கள். வண்டியில் அதைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ், காரின் விளக்கை அணைத்தபடி அந்த இடத்தைக் கடக்கும் போதும், அதற்கான விளக்கம் சொல்லும் போதும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அழகாக வெளிப்படுகிறது. இதே போல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இயக்குநர் மெனக்கெட்டிருக்கலாம்.
பாடல் இசையிலும் பின்னணி இசையிலும் விஜய் ஆண்டனியிடம் எந்த மாறுதலும் இல்லை. விறுவிறுப்பில்லாத திரைக்கதைக்கு விறுவிறுப்பைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளரும், ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும். சண்டைக் காட்சிகள் மிகை என்னும் சொல்லையே பரிகசிக்கும் அளவுக்கு இருக்கின்றன. அழகான ஹீரோயின் இருந்தும் தேவையின்றி டூயட்டைத் திணிக்காமல் இருந்ததைப் பாராட்டலாம்.
படத்தில் சொல்ல வந்த விஷயம் இன்றைய திரை பிரபலங்களையே விமர்சிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் சர்கார் திரைப்படப் பிரச்சினையின்போது அரிவாளுடனும் ஆபாச வார்த்தைகளைப் பேசிச் சிறார்கள் வெளியிட்ட வீடியோவை இந்தப் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
நல்ல கருத்தைச் சொல்ல முயன்றுள்ள இயக்குநர் அதைச் சொல்லும் விதத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Discussion about this post