தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளுள் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. கநாநாயகனுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்காமல் கதாநாயகியை மட்டுமே கொண்டு உருவாகும் படங்களிலும்கூட தொடர்ந்து கவனம் செலுத்திவரும் இவர், இன்று (நவம்பர் 18) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்த நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக நயன்தாரா நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்திலிருந்து ஒரு மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இதில் சித்தம்மா எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அலங்கார ஆபரணங்களுடனும், ஜொலிக்கும் வண்ண வேலைப்பாடுகளைக் கொண்ட உடையை அணிந்தும் இதில் தோன்றியுள்ளார் நயன்தாரா.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைக் கதையைக் கொண்டு தயாராகிவரும் இந்த சைரா நரசிம்மா ரெட்டியில், நடிகர் சிரஞ்சீவி நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார். அமிதாப் பச்சன் குரு கோசாயி வெங்கன்னா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி ஒப்பய்யா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராம் சரண் இந்தப் படத்தை தயாரிக்கிறார். முன்னதாக அமிதாப்பின் பிறந்தநாளின்போதும் அமிதாப்பின் கதாபாத்திரத்தை விளக்கும் வகையில் போஸ்டர் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சைரா நரசிம்ம ரெட்டி போலவே நயன்தாரா நடிக்கும் மற்றொரு படத்திலிருந்தும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, கதாநாயகியை மையமாகக் கொண்ட நயன்தாரா நடித்து வரும் படங்களுள் கொலையுதிர்க் காலம் எனும் படமும் ஒன்று. கமல் நடித்த உன்னைப்போல் ஒருவனை இயக்கிய சக்ரி டோலட்டி இதை இயக்குகிறார்.
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் மர்டர் மிஸ்ட்ரி கதைக் களத்தைக்கொண்டு உருவாகுகிறது. சமீபமாக இந்தப் படத்தின் வெளியீடு குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் இந்தப் படம் 2019 ஜனவரியில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படமும் இதே ஜனவரியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post