தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், 2000ஆவது ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த வன்முறையின்போது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா வந்த மாணவிகளின் பேருந்துக்கு சிலர் தீவைத்தனர். இதில் சிக்கி கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியாகினர்.
இது தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர்களான நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2010ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், 2016ஆம் ஆண்டு இவர்கள் மூவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் சிறையில் இருந்துவரும் சுமார் 1,800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இவர்கள் விடுதலைக்காக ஆளுநரிடம் அனுப்பப்பட்ட தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து திருப்பி அனுப்பினார்.
ஆனால் மூவரையும் விடுவிக்கும் முயற்சியில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டது, இதுதொடர்பாக புதிய ஆவணத்தையும் ஆளுநருக்கு அனுப்பியது. இதனையடுத்து மூவரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரையும் விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, அது வேலூர் மத்திய சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று (நவம்பர் 19) சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். மூவரும் ஆட்டோவில் ஏறி ரகசியமாக வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “27 ஆண்டுகள் நரக வேதனைத் துன்பத்தில் சிறையில் வாடும் ஏழு பேரை விடுதலை செய்ய முன்வராத தமிழக ஆளுநர், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய ஆணை பிறப்பித்து இருப்பது, அக்கிரமத்தின் உச்சகட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்பார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசின் புரோக்கராகச் செயல்பட்டு வருகின்றார். தமிழக வரலாற்றிலேயே இத்தகைய மோசமான ஒரு ஆளுநர் பொறுப்பு வகித்தது இல்லை. நீதியையும், மனித உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கின்ற வேலையில் தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” என்று விமர்சித்துள்ள வைகோ,
ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டதைத் தவிர, எழுவரை விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியிலும் அண்ணா தி.மு.க. அரசு ஈடுபடவில்லை. 3 அண்ணா தி.மு.க.வினரை மட்டும் விடுதலை செய்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தீர்ப்பையே உதாசீனப்படுத்திய மத்திய அரசுக்கும், அதன் ஏஜெண்டான தமிழக ஆளுநருக்கும் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post