கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் பகுதியில், வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.400, ரூ.500 என கட்டணம் வசூலிக்கின்றனர். ஜெனரேட்டர் வசதி உள்ள கடைகளில் மக்கள் இன்வெர்ட்டர் பேட்டரிகளுடன் காத்திருந்து ரீசார்ஜ் செய்து செல்கிறார்கள். இதேபோல் செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய ரூ.40 முதல் ரூ.50 வரை வசூலிக்கின்றனர். கஜா புயல் தாக்கி 4 நாட்களாகியும் டெல்டாவில் நிவாரணப்பணிகள் நடக்காததால் தீராத துயரத்தில் மக்கள் கதறுகின்றனர். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. பால், குடிநீர், காய்கறிகள், மண்ணெண்ணெய் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதனால் அவ்வழியாக வரும் வாகனங்களை பொதுமக்கள் மறித்து உணவு கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 200 கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் 200 கிராமங்களும் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் நாகைக்கு சென்று வாடகைக்கு பேட்டரி வாங்கி வந்து கிராமங்களுக்கு மின்விளக்கை எரிய வைத்துள்ளனர். சில கிராமங்களில் வீடுகள் முழுமையாக சேதமடைந்ததால் அவர்கள் வீதியில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அரசு எந்தவித நிவாரண உதவிகளும் செய்யாததால், கிராமமக்கள் ஒன்று சேர்ந்து சாலையில் சமையல் செய்கின்றனர்.
Discussion about this post