சத்தீஸ்கர் மாநிலத்தில், இரண்டாம் கட்ட தேர்தல், இன்று(நவ.,20) தொடங்கி நடைபெற்று வருகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதி என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12ம்தேதி நடைபெற்றது. நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின், 19 மாவட்டங்களில் உள்ள, 72 தொகுதிகளில், இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நக்சல்களால் பாதிக்கப்பட்ட, கரியாபந்த், கபிர்தம், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில், பாரதிய ஜனதா தீவிரமாக உள்ளது. மூன்று முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், தீவிரமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவருமான, அஜித் ஜோகி, பகுஜன் சமாஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கிறார்.
Discussion about this post