ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டண்டாகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படத்துக்கு அயோக்யா எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸானதிலிருந்து தான் தெலுங்கு சினிமா ரசிகர்களும், தமிழ் சினிமா ரசிகர்களும் மேற்கண்டவாறு பேசி வருகின்றனர். விஷாலுக்கு கணிசமான ஆதரவும் இருக்கிறது. ஆனால், இங்கு பிரச்சினையே வேறு.
விஷால் நடிக்கும் அயோக்யா திரைப்படம், 2015ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான டெம்பர் திரைப்படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளியானது. பல மாதங்களாக புழக்கத்தில் இருக்கும் தகவல் என்றாலும், இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவும் இல்லை; மறுக்கவும் இல்லை. எனவே, அயோக்யா திரைப்படத்தை இப்போது வரையிலும் டெம்பர் ரீமேக்காகவே கருதுகின்றனர் ரசிகர்கள். விஷாலுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால், அங்கிருக்கும் ரசிகர்களும் விஷாலின் திரைப்படங்களைக் கவனித்து வருகின்றனர். எனவே, அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானதும் இந்தப் பஞ்சாயத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
டெம்பர் படத்தில் என்.டி.ஆர் கேரக்டருக்குப் பயன்படுத்தியது போன்ற காஸ்ட்யூம், கார், கண்ணாடி என சகலமும் விஷாலின் கேரக்டருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கமற்ற காவல் அதிகாரியாகவும், பணத்துக்காக எதுவும் செய்பவராகவும் வரும் ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டர், இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பார்த்த ‘சாமி’ விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்துவதாக இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால், போக்கிரி திரைப்படத்தில் (விஜய் நடித்த ரீமேக் போக்கிரி அல்ல. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒரிஜினல் போக்கிரி) மகேஷ் பாபு வெற்றிகரமாக நடித்த போலீஸ் கேரக்டருக்குப் பதில் சொல்லும் விதமாகவே ஜூனியர் என்.டி.ஆர் இந்த கேரக்டரை ஏற்றிருந்தார். இப்போது அதில் விஷால் கைவைத்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை நெட்டிசன்கள் காத்திருப்பது நல்லது.
Discussion about this post