கஜா புயல் பாதித்து ஐந்து நாட்களாகியும் இன்னும் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்கள், பல இடங்களில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளார் என்ற தகவல் வெளியானது. அதன்படி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து புதுக்கோட்டை சென்றார்.
புதுக்கோட்டை மாப்பிளையார்குளம், மச்சுவாடி பகுதியில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர், பின்னர் புயலால் இறந்த 6பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். ஆய்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “கஜா புயலால் பல மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் பல ஆண்டுகளாக இருந்த மரங்கள் கூட வேரோடு சாய்ந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுவருகிறது. நேற்றுவரை கணக்கிடப்பட்ட சேத மதிப்பீடுகளுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்குவதில் யாரும் விடுபடமாட்டார்கள்” என்று உறுதியளித்தார்.
“வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள மின் வாரிய ஊழியர்கள், மின்பழுது ஏற்பட்டுள்ள இடங்களில் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். நாளை மாலைக்குள் நகரம் முழுவதற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும். அனைத்து இடங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது” என்று கூறிய முதல்வரிடம்,
புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “இதுகுறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்தவுள்ளேன். சந்திப்புக்குப் பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பாதிப்புகளை ஆதாரத்துடன் சமர்ப்பித்து, தேவையான நிதியைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று பதிலளித்தார்.
மேலும், கேரளாவில் இயற்கை சீற்றம் வந்தபோது, நிவாரணப் பணிகள் முடிய ஒரு மாதம் ஆகிவிட்டது.அங்கு எதிர்க்கட்சிகள் எவ்வித பிரச்னையும் எழுப்பவில்லை. நம்முடைய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அனைவரும் இணைந்து உதவி செய்ய வேண்டும், செயல்பட வேண்டும் என்ற மனப்பான்மை அங்கு இருந்தது. ஆனால் இங்கிருக்கும் எதிர்க்கட்சிகளிடம் அது இல்லை. ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். கட்சி வித்தியாசம் பாராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முதல்வர்,
“அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். நிவாரணப் பணிகளில் ஈடுபட வரும் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளத்திற்கு சென்ற முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.இதனைத் தொடர்ந்து திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார்.
முதல்வர் ஆய்வு ரத்து
இந்த நிலையில் முதல்வரின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டப் பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர், கஜா புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லாமல் ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி திரும்பினார். நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதால், மோசமான வானிலை காரணமாக முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆய்வு ரத்துக்கு அம்மாவட்ட மக்கள் அரசின் மீது கோபத்தில் இருப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
Discussion about this post