‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் ரூ40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன.
புயல் ஏற்படுத்திய சேதங்கள் மிக அதிகமென்றாலும், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்திச் சென்றது. பல ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். சிலர் நிவாரணப் பொருட்களாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சிவக்குமார் குடும்பத்தினர், நடிகர் ரஜினி காந்த் தலா ரூ50 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் ரூ10 லட்சம், கவிஞர் வைரமுத்து ரூ5 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் நிவாரண நிதி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ரூ40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை ரசிகர்கள் மூலம் கொடுத்து உதவுமாறு நடிகர் விஜய் அறிவுறுத்துள்ளார். நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்தப்பட்டு நிவாரணப் பணி மேற்கொள்ள நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் வலியுறுத்தியுள்ளார். 40 லட்சம் ரூபாய் பணமும் நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளில் பிரித்து செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post