பட வெளியீட்டுத் தேதிக்கு முதல் 15 நாட்கள், வெளியான பின்பு நான்கு வாரங்கள் மற்ற படங்களை ரிலீஸ் செய்வதற்குத் தயக்கம் காட்டுவார்கள்.
இப்படி பெரிய பட்ஜெட் படம் வெளியாகிற வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸ் செய்யப்படாததால் 40% தியேட்டர்கள் புதிய படங்கள் வெளியிடும் வாய்ப்பை இழந்து வருமான இழப்புக்கு உள்ளாகின்றன. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் ஒரே படத்தைப் பார்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
ரஜினி, தமிழ் சினிமாவில் வசூல் சூப்பர் ஸ்டாராக உச்ச கட்டத்தை எட்டிய 1980 காலகட்டங்களில்கூட ரஜினி படத்துடன் கமல்ஹாசன், விஜயகாந்த், ராஜ்கிரண், சத்யராஜ், பாக்யராஜ் நடித்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றன.
தற்போது அப்படி ஒரு சூழல் ஏன் இல்லை என்பதை கோடம்பாக்க வியாபாரிகள் யோசிக்க மறந்துவிட்டார்கள். போட்டிக்குப் படமின்றித் தனித்து வந்து முதல் வாரத்தில் வசூலை வாரிச் சுருட்டித் தங்களை முன்னணி நட்சத்திரமாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போக்கு கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதனைச் சமநிலைப்படுத்தத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. திரைப்படத் தயாரிப்புத் துறையை உயிர்ப்புடன் வைத்திருப்பது சிறு பட்ஜெட் படங்களும், இரண்டாம் கட்ட நடிகர்கள் நடித்த படங்களும்தான்.
2.0 படத்தின் பட்ஜெட் 600 கோடி என்கிறது தயாரிப்பு தரப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி வசூல் தமிழ் மொழி பேசுபவர்களைச் சார்ந்தே இருக்கும். ஆனால் தயாரிப்புக்காகச் செலவழிக்கப்பட்ட முதலீட்டின் 50% பலனை அனுபவித்தது வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களே.
இந்தியாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்கிற பெருமைக்குரிய 2.0 தமிழகத்தில் 700 திரைகளில் திரையிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
படத்தின் வியாபாரம் இன்னும் தொடங்கப்படவில்லை. ரஜினிகாந்த் நடித்து வெளியான முந்தைய படங்களின் வசூல் கணக்கை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயிக்கப்பட போவதில்லை என்று தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமற்ற முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்குப் கூறிவிட்டனர்.
Discussion about this post