கஜா புயல் பாதிப்பிலிருந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. பல இடங்களில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின், தமிழிசை, பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இரண்டாவது நாளாக நேற்று (நவம்பர் 20) திருவாரூர் மாவட்டம் வடுவூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “19, 20, 21 ஆகிய தேதிகளில் டெல்டா பகுதிகளில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் ஹெலிகாப்டரிலேயே பிறந்துவளர்ந்ததுபோல வந்துசென்றுள்ளனர். சாலை வழியாகச் சென்று மக்களையெல்லாம் பார்க்க வேண்டும் இல்லையா? உணவில்லாமல், மாற்றுத் துணியில்லாமல் அனைவரும் சாலையில் நிற்கிறார்கள். முகாம் என்ற பெயரில் மக்களை ஆடு, மாடு போல அடைத்துவைத்துள்ளனர். விவசாயம், மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துபோயுள்ளது. ஹெலிகாப்டரில்தான் வந்துபார்க்க வேண்டுமா? மக்களை சந்திக்க முடியாத பயத்தில்தான் ஹெலிகாப்டரில் வந்து புதுக்கோட்டையில் ஒரு இடம், தஞ்சையில் ஓரிடத்தில் பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.
“அமைச்சர்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள் சந்திக்க வேண்டும். விஏஓ கூட வரவில்லை என்றுதான் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தயவு செய்து அங்கு சென்று நிவாரண உதவிகளை செய்ய வேண்டும். இல்லையெனில் அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்” என்று குறிப்பிட்ட தினகரன்,
“பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று மடங்கு இழப்பீடு கொடுக்கப்பட்டால்தான், வீடு இழந்தவர்கள் மீண்டும் வீட்டை புணரமைக்க முடியும். எனவே அறிவிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் எந்த விதத்திலும் பலனில்லாமல் போய்விடும். மீனவர்களுக்கு பல மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
Discussion about this post