சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிறகு எதிராக இந்து அமைப்புகளும், பா.ஜ.கவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இருமுடிக் கட்டி சபரிமலை செல்ல முயன்ற இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா டீச்சர் மற்றும் பா.ஜ.க. கேரள மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து, தினமும் ஒரு முக்கிய பிரமுகரை சபரிமலைக்கு அனுப்பும் திட்டத்தை பாஜக கையில் எடுத்தது. அதன்படி, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பா.ஜ.க. எம்.பி. முரளிதரன் ஆகியோர் சபரிமலை சென்றனர். அந்த வரிசையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலை புறப்பட்டார். நேற்று பத்தனம்திட்டாவில் தங்கிய அவர், இன்று காலை காரில் நிலக்கல் சென்றார்.
அப்போது, அவரை தடுத்த போலீசார், கேரள அரசு பேருந்தில் பம்பைக்கு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால், மத்திய அமைச்சர் என்ற முறையில் பொன்.ராதாகிருஷ்ணன் காரை மட்டும் பம்பைக்கு அனுப்பலாம் என கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சாதாரண பக்தருக்கு என்ன விதியோ அதன்படி நான் சபரிமலைக்குச் செல்கிறேன் என கேரள மாநில அரசு பேருந்தில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பொன் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருக்கிறார்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த பொன்னார், நான் இதுவரை கண்டிராத அளவுக்கு பக்தர்களிடம் கெடுபிடிகாட்டுகிறார்கள். சபரிமலை, கேரள அரசின் சொத்து அல்ல. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐயப்ப பக்தர்களின் சொத்து என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
Discussion about this post