பாஜகவுக்கு எதிராக அணி திரட்டிவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதன் ஒரு பகுதியாகப் பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார். அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அமையவுள்ள அணிக்குத் தலைமை தாங்கப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று (நவம்பர் 20) நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “நாட்டில் இரண்டு அணிகள் மட்டுமே உள்ளன. ஒன்று பாஜக மற்றொன்று பாஜகவுக்கு எதிரான அணி. அடுத்த தேர்தலில் மோடி மற்றும் அமித் ஷாவை வீழ்த்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நாட்டைக் காப்பாற்றவே காங்கிரஸுடன் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது ஜனநாயகக் கட்டாயம்.
குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாகக் கூடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராடுவது குறித்து ஆலோசிப்போம்” என்று தெரிவித்தார்.
பாஜக எதிரான அணியை மூத்த தலைவர் வழிநடத்துவார் என்று தெரிவித்த சந்திரபாபு, ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுபவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறினார்.
சந்திரபாபுவை விட சந்திர சேகர ராவ் முதிர்ச்சியடைந்த தலைவர் என்று பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சந்திரபாபு, “சந்திரசேகர ராவ் மோடியின் கூட்டாளியாக இருந்தார் என்றும் அவரை அரசியலில் ஊக்குவித்ததே மோடிதான்” என்றும் கூறினார்.
தெலங்கானாவில் சிறிய நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களை வழங்கும் பிரதமர் ஆந்திர தலைநகருக்கு விமான சேவை அளிப்பது குறித்துக்கூட யோசிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
Discussion about this post