கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் செய்ய நினைக்கும் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நடிகர் சிம்பு ஒரு புதிய யோசனை கூறியுள்ளார். இதுகுறித்து சிம்பு பேசிய வீடியோ பதிவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிம்பு அந்த வீடியோவில், டெல்டாவில் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியும். மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்னால், முடிந்த உதவியை நான் செய்து விடுவேன்.
என்னுடைய ரசிகர்களும் களத்தில் உதவி செய்து வருகிறார்கள். இதுபோக, தமிழகத்தில் நிறைய பேர், நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் வரும் போது, நாம் ஏதேனும் ஒரு உதவி செய்ய வேண்டுமென நினைக்கிறோம். ஆனால், நாம் கொடுக்கிற பணம், செய்கின்ற உதவிகள், சென்று சேர்கிறதா, கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு பயன்படுகிறதா என்பது தெளிவாக தெரிவதில்லை. இது ஒரு பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. நான் கொடுக்கணும்னு நினைக்கிறதை முதல்வரிடம் சென்று கொடுக்க முடிகிறது. ஆனால், ஒரு பாமரன் 10 ரூபாய் கொடுக்கனும்னு நினைக்கும் போது, அதற்கான வாய்ப்புகள் இல்லை.
A nice thought and initiative by STR hope it all works out well #SaveDelta #uniteforhumanity #unitefordelta #STR pic.twitter.com/SFYsusYZs6
— Raja yuvan (@thisisysr) November 21, 2018
அதனால், தமிழ்நாட்டு மக்கள் இணைந்து செயல்படுவதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது, நாம் எல்லோரும் செல்போன் பயன்படுத்துகிறோம். ஒரு காலர் ட்யூனுக்கு 10 ரூபாய் பயன்படுத்துகிறோம். நிகழ்ச்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் மிஸ்ட் கால் கொடுக்கிறோம். அதுபோல், இந்த செல்போன் நெட்வொர்க் மூலம் பணம் கொடுக்க வழி இருக்கிறது. எல்லா நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட்டு, யார் யார் எந்தப் பெயரில் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலுடன் அரசுக்கு பணத்தை கொடுக்கலாம். இதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த யோசனை சரி என்று தோன்றினால், #uniteforhumanity #unitefordelta என்று போட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு போய் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பாக, காவிரி நதிநீர் பிரச்னையின் போது சிம்பு ஒரு யோசனை தெரிவித்து இருந்தார். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு நல்லிணக்கத்தின் பொருட்டு அம்மாநில மக்கள் ஒரு டம்பளர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என சிம்பு வலியுறுத்தினார். சிம்புவின் கோரிக்கையை ஏற்று சிலர் தண்ணீர் வழங்கிய வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அப்போது பகிரப்பட்டது. இந்நிலையில், தற்போது புயல் பாதிப்புக்கு புதிய யோசனை ஒன்றினை சிம்பு கொடுத்துள்ளார்.
Discussion about this post