இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை விட மகேந்திர சிங் தோனி மிகவும் பிரபலமானவர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நீண்ட காலமாக கிரிக்கெட் உலகை ஆண்டு வந்த தோனி, தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். கேப்டன் கூல், சிறந்த பினிஷர் என்று அழைக்கப்பட்ட தோனி தற்போது பாஃர்ம் அவுட் ஆகி சிரமப்பட்டு வருகிறார். மோசமான பாஃர்ம் காரணமாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவருக்கு, டி20 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
மோசமான பாஃர்மை வெளிப்படுத்தி வந்தபோதிலும், தோனியின் மீதான அன்பு அவரது ரசிகர்களுக்கு இன்னும் குறைந்தபாடில்லை. இதனை உறுதி செய்யும் வகையில், சமீபத்திய ஆய்வு முடிவுகள் உள்ளன. இந்தியாவின் மிகவும் பிரபலமான மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே அடுத்து மூன்றாவது நபராக தோனி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம், ஆன்-லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 5வது இடத்தை நடிகர் அக்ஷய் குமார் பிடித்துள்ளார். அமீர் கானும், ஷாருக்கானும் முறையே 7வது மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
Discussion about this post