எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பின் சரியாக பணி செய்யாவிட்டால் செருப்பால் அடித்து ராஜினாமா செய்ய வையுங்கள் என சுயேட்சை வேட்பாளர் பிரசாரம் செய்வது தெலங்கானா மக்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, எம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அணியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஆக்குல அனுமந்தலு நேற்று மெட்டுபல்லி நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பெட்டி நிறைய செருப்புகள், ராஜினாமா கடிதங்கள் ஆகியவற்றை உடன் எடுத்து வந்த அவர் வீடு, வீடாக சென்று தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செருப்பு.
ஒரு ராஜினாமா கடிதம் ஆகியவற்றை கொடுத்த அவர் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக நான் பதவியேற்ற பின் சரியான முறையில் மக்களுக்கு சேவை செய்ய தவறினால் இப்போது கொடுக்கும் இதே செருப்பால் என்னை அடித்து மக்களுக்கு சேவை செய்ய வையுங்கள். என் மீது அதிருப்தி ஏற்பட்டால் நான் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார். புதுமையான முறையில் அவர் நடத்திய தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பு ஆகியவை பற்றி தொகுதி மக்கள் வேடிக்கையாகவும் பரபரப்பாகவும் பேசிக் கொள்கின்றனர்.
Discussion about this post