உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டிடத்தை கட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
குஜராத்தில் உலகின் மிக உயரிய சிலையாக கருதப்படும் பட்டேல் சிலை திறக்கப்பட்டது. அதற்கு போட்டியாக உயரமான சிலை அமைக்க பல்வேறு மாநிலங்கள் போட்டி போட்டு அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.
ராமருக்கு 201 மீட்டரில் சிலை அமைக்க போவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க போவதாக கர்நாடக அரசும் அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் புதிதாக அமையவுள்ள நகரான அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டசபை கட்டிடம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த உயரமான சட்டசபை கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்பை சந்திரபாபு நாயுடு இன்னும் 2 நாட்களில் இறுதி செய்ய உள்ளதாக லண்டனை சேர்ந்த கட்டுமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
3 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த சட்டசபை கட்டிடத்தில் 2 மாடங்கள் அமைக்கப்பட உள்ளது. 80 மீட்டர் உயரம் கொண்ட முதல் மாடம் 300 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்டதாக அமை உள்ளது. 250 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள 2வது மாடம் 20 பேர் அமரக்கூடிய வசதி கொண்டதாக அமை உள்ளது. இந்த 2வது மாடத்தில் இருந்து அமராவதி நகர் முழுவதையும் பார்க்க முடியும்.
2வது மாடம் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட உள்ளதாகவும், இங்கு செல்ல லிப்ட் வசதியும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புயல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த சட்டசபை கட்டிடம் அமைக்கப்பட்டால் நாட்டில் மிக உயரமான கட்டிடமாக இது கருதப்படும். நவம்பர் மாத இறுதியில் இந்த சட்டசபை கட்டிடம் கட்ட டெண்டர் கோரப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த கட்டிட பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளது.
Discussion about this post