திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா என கோஷ்ங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டினாலும் பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
மலையுச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
திருவண்ணாமலை மகா தீபத்தை காண வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
Discussion about this post