வங்கியில் அடமானம் வைத்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், லண்டனில் இருக்கும் தனது சொகுசு வீட்டை விஜய் மல்லையா இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இதுதொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவரை நாடுகடத்தக்கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கில், அடுத்தமாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மத்திய லண்டன் பகுதியில் கார்ன்வால் டெரஸ் என்ற இடத்தில் இருக்கும் சொகுசு வீட்டில் தற்போது வசித்து வரும் மல்லையா, அந்த வீட்டையும் 2012-ம் ஆண்டு 185 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து சுவிஸ் வங்கியில் கடன் பெற்றிருந்தார்.
இக்கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த மல்லையா கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதன் காரணமாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யு.பி.எஸ் வங்கி, மல்லையா வசிக்கும் வீட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மிகப் பிரமாண்டமான இந்தச் சொகுசு வீட்டில் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டாய்லெட் உள்ளது. முன்னதாக இந்திய பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே, மல்லையாவின் வெளிநாட்டுச் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது.
Discussion about this post