ஷாருக் கான், கரீனா கபூர் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசோகா. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்த வரலாற்றுத் திரைப்படமான இதில் கலிங்கப்போர் பற்றிய காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகக் கூறி கலிங்க சேனா என்ற அமைப்பு அப்போது போலீசில் புகாரளித்தது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடந்ததால் ஒடிசாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடிய இப்படத்தின் பிரச்சினை அப்போது அப்படியே அடங்கிப் போனது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வரும் 27ஆம் தேதி உலகக்கோப்பை ஹாக்கி தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஷாருக் கானுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். அவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. அந்தத் தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ என்ற பாடலுக்கு ரஹ்மானும், ஷாருக் கானும் நடனமாட உள்ளனர்.
இதற்கிடையே, 17 வருடப் பழைய பஞ்சாயத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்து, “ஷாருக் கான் ‘அசோகா’ படத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியதுடன் விமான நிலையம் முதல் மைதானம் வரை எந்த இடத்திலும், ஷாருக் கான் முகத்தில் கருப்பு மை வீசப்படும்; கருப்புக் கொடிகள் காட்டப்படும்” என்று கலிங்க சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் நிஹர் பானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக வரும் அனைத்து விவிஐபிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அம்மாநில அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post