எந்திரனில் ரஜினியின் வசீகரன் எனும் கதாபாத்திரத்திற்குக் காதலியாக வந்த ஐஸ்வர்யா ராய், இரும்புக்கும் இருதயம் முளைக்க வைத்து ‘சிட்டி’ ரஜினியையும்கூட காதல் கொள்ளச் செய்திருப்பார். தற்போது உருவாகிவரும் 2.O படத்தில் எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்கிறார். இதனால் ஐஸ்வர்யா இதில் நடிக்கிறாரா, நடித்தால் என்ன கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்படும் எனும் எதிர்பார்ப்பு கோலிவுட்டில் இருந்துவந்தது. பின்னர் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடிக்கிறார் எனவும்கூட கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில், படத்தின் இயக்குநரான ஷங்கரே இந்த விஷயத்தைத் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் மீடியாவுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் ஐஸ்வர்யா குறித்துக் கூறிய அவர், “எந்திரனில் சனாவாக நடித்த ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் இந்தப் படத்திலும் கூட பல இடங்களில் பேசப்படும். ஆனால் விஷ்யூவலாக எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரம் காட்டப்பட மாட்டாது” எனக் கூறியுள்ளார்.
விஷ்யூவலாக அவர் காட்டப்பட மாட்டார் எனக் கூறப்பட்டிருப்பதால் ஐஸ்வர்யா இந்தப் படத்திற்காக பிரத்யேகமாக நடித்திருக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபாரம் தற்போது மும்முரமாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post