”இடைத் தேர்தலை குறிவைத்து அதிமுகவினர் சுவர் விளம்பரத்துக்காக அட்வான்ஸ் புக்கிங்காக 10 ஆயிரம் கொடுத்து வைத்ததை டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் டெல்டா மாவட்டங்களை நோக்கித்தான் இருக்கிறது. ஆனால், இந்தக் களேபரத்திலும் சத்தமில்லாமல் அமமுகவினர், அதாவது தினகரன் அணியினர் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் தினகரன் தன் கட்சி நிர்வாகிகளுக்கு அங்கிருந்தபடியே இந்த அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் இதுதான்..
‘இடைத் தேர்தல் நடக்கப் போகும் 20 தொகுதிகளிலும் அதிமுகவினர் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அமமுக அவங்களைவிட அட்வான்ஸாக போயாகணும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அமமுக பங்களிப்பு இருக்கணும். அதனால் இந்தத் தொகுதியில் இருக்கும் வாக்காளர்களிடம் அவங்க ஆதார் கார்டு ஜெராக்ஸை உடனடியாக வாங்குங்க. ஒரு ஆதார் கார்டு ஜெராக்ஸ்க்கு ஒரு குக்கர் கொடுக்கப் போறோம்னு சொல்லுங்க. இதைப் பொங்கல் பரிசாக உடனடியாக கொடுப்போம்னு சொல்லிடுங்க.
ஒரு வீட்டுல நான்கு ஓட்டு இருந்தால், இரண்டு குக்கர் ஒரு மிக்ஸி கொடுக்கிறோம்னு சொல்லிடுங்க. எலெக்ஷனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியே கேளுங்க. அப்படிக் கேட்டு வாங்கும்போது எல்லா வாக்காளர்களுக்கும் நாம நெருக்கமாகிடுவோம்.
அவங்க எல்லோருடைய மொபைல் நெம்பரும் நமக்கு வந்துடும். அந்த நெம்பர்களை வெச்சு நாம ஒரு டேட்டா ரெடி பண்ணுவோம். குக்கரும் மிக்ஸியும் கொடுக்க ஆரம்பிச்ச நாளிலிருந்து அவங்க செல்லுக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்ப ஆரம்பிக்கலாம். அப்படிப் போனால், எலெக்ஷனுக்குள் எல்லோரும் நம்மோடு நெருக்கமாகிடுவாங்க. அவங்களை கடைசி வரைக்கும் தொடர்புகொள்வது எளிதாக இருக்கும். சில வீடுகள்ல 8 ஓட்டு வரைகூட இருக்கும். அதையெல்லாம் அப்படியே நாம பேசி பல்க் ஆக நம்ம பக்கம் இழுத்துட முடியும். அதனால், முதல்ல நீங்க செய்ய வேண்டியது அவங்க ஆதார் கார்டு ஜெராக்ஸை வாங்குவதுதான். அதற்கான வேலைகள்ல முதல்ல இறங்கிடுங்க.
செந்தில் பாலாஜி போட்டியிடப் போகும் அரவக்குறிச்சி தொகுதியில் பல இடங்களில் அவர் ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கிட்டாரு. டிசம்பர் முதல் வாரத்துக்குள் கார்டு கொடுத்த எல்லோருக்கும் குக்கரும் மிக்ஸியும் கொடுப்பதாக சொல்லிட்டாரு. அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு. குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கு.
பெண்கள் ஆதரவு இருந்தாலே போதும். வீட்டுல இருக்கிறவங்களை அவங்க பார்த்துக்குவாங்க. அதனால மத்த தொகுதிகளிலும் இதே ஃபார்முலாவை பயன்படுத்த ஆரம்பிங்க. வேறு எந்த ஆதாரமும் கேட்க வேண்டாம். ஆதார் கார்டு மட்டும் வாங்குங்க போதும்…’ என்பதுதான் அந்த அசைன்மென்ட்.
அதன்படியே, ஒருபக்கம் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு நிர்வாகிகள் போயிருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த 20 தொகுதிகளிலும் பொதுமக்களிடம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கும் வேலைகளையும் தினகரன் ஆதரவாளர்கள் தீவிரமாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் தேதிக்கு முன்பாகவே குக்கரும் மிக்ஸியும் வீடு தேடிப் போய்விடும். இதுதான் தினகரனின் திட்டம்.”
Discussion about this post