அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெருமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (நவம்பர் 24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன். அப்போது, “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவுப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெருமழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக, இனிவரும் நாட்களில் மழையளவு குறையும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 23 செ.மீ. மழையும், திருவாரூர் மாவட்டத்தில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இந்தப் பருவத்தில் 33 செ.மீ. மழை பொழிய வேண்டும். ஆனால் 30 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. தமிழகத்தில் மழை அளவு இயல்பை விட 9 சதவிகிதம் குறைந்துள்ளது. சென்னையில் இயல்பை விட 45 சதவிகிதம் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார் புவியரசன்.
Discussion about this post