கஜா புயல் நிவாரண நிதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலின் கோரத்தாண்டவம் மக்களை புரட்டிப் போட்டிருக்கிறது. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் அதிமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புயல் பாதிப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் கஜா புயல் பாதிப்புத் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் அருகே தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடம் இன்று (நவம்பர் 25) குறைகளைக் கேட்டறிந்த அவர், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “யானை போல வந்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் தென்னை, முந்திரி, மா, பலா, வாழை என அனைத்துத் தோட்டங்களும் முற்றிலும் அழிந்துவிட்டன. மத்தியக் குழுவிடம், மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கப் பரிந்துரை செய்ய வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொண்டோம். கஜா புயலை ஒரு பேரிடர் இழப்பாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மத்தியக் குழுவும் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வருகிற 11ஆம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அதிமுகவைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் காவிரி பிரச்சினைக்குக் குரல் கொடுத்தது போல கஜா புயலுக்கும் நிவாரணம் கேட்டு குரல் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post