புயல் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை.
கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு கஜா புயல் கரையைக் கடந்தபோது, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெய்வாசல்படி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கஜா புயலின்போது, மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் விழுந்தன. இதில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சாமியம்மா என்ற மூதாட்டியின் கால் முறிந்தது. அவரைச் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, காலை ஸ்கேன் செய்ய அவரது உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், பணம் செலுத்த அவர்களிடம் வசதியில்லை.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதைதொடர்ந்து, கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
விடுமுறை
கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Discussion about this post