2.0 படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கும் முயற்சியில் இயக்குநர் ஷங்கரின் கட்டுப்பாடுகளை மீறி புகைப்படங்களை லைகா நிறுவனம் ஊடகங்களுக்கு அனுப்பியதுடன் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான பாடல் காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் படம் 2.0 எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய புரமோஷன் எதுவும் செய்யப்படவில்லை. வெகுஜன தளங்களில் 2.0 படம் பற்றிய அரட்டைகள் குறைவாகவும் சினிமா வட்டாரத்தில் அதிகமாகவும் உள்ளது. தடுமாறிக் கொண்டிருந்த தமிழக வியாபாரத்தை லைகா முடித்திருக்கிறது. பணத்தேவைகள் அதிகமிருப்பதால் கேட்கிற அட்வான்ஸ் தொகையைக் கொடுக்கிற விநியோகஸ்தர்களுக்கு ஏரியா உரிமையை வழங்கியிருக்கின்றனர்.
சென்னை நகரில் அதிக திரையரங்குகளைப் பராமரித்து வரும் சத்யம் சினிமாஸ் (சென்னை நகர உரிமை), விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் அருள்பதி (செங்கல்பட்டு ஏரியா), தனது ஏரியாவில் அதிகமான தியேட்டர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசன் (வட ஆற்காடு ஏரியா), லைகா நிறுவனத்துக்கு ஃபைனான்ஸ் கொடுத்துள்ள மதுரை அன்பு செழியன் (மதுரை, கோவை ஏரியா), லிங்கா – கபாலி – காலா எனத் தொடர்ந்து சேலம் ஏரியாவில் ரஜினி படங்களை ரிலீஸ் செய்த 7G சிவா (சேலம் ஏரியா) லைகா படங்களை தொடர்ந்து வாங்கி வரும் லெட்சுமணன் (TK ஏரியா) ஆகியோர் 2.0 படத்தின் விநியோகஸ்தர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருச்சி – தஞ்சை ஏரியாவில் தியேட்டர்களும் சேதாரமடைந்திருக்கிறது. இதனால் அதிகமான தியேட்டர்களில் 2.0 படத்தைத் திரையிட முடியாது என்பதால் அட்வான்ஸ் தொகை எவ்வளவு என்பதில் முடிவு எடுக்க முடியாததால் விநியோகஸ்தர் யார் என்பது முடிவாகவில்லை.
நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி லைகா கேட்கும் விலை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் விருப்பம் காட்டவில்லை. எனவே, தங்கள் நிறுவனத்துடன் தொழில் ரீதியாகத் தொடர்பு உள்ளவர்கள் தாங்கள் கேட்கும் அட்வான்ஸ் தொகையை கொடுப்பார்கள் என்பதால் இந்த முடிவுக்குத் தயாரிப்பு தரப்பு வந்திருக்கிறது. சுமார் 100 முதல் 125 கோடி வரை தமிழகத்தில் விநியோகஸ்தர்களிடமிருந்து அட்வான்ஸ் பெற உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
கேரள மாநில விநியோக உரிமை 15 கோடி ரூபாய்க்கும், கர்நாடக உரிமை 25 கோடிக்கும் வியாபாரம் முடிக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் 100 கோடி ரூபாய்க்கு தெலுங்கு உரிமை, வியாபாரம் பேசப்பட்டிருந்த நிலையில் படம் தயாராக தாமதமானதால் 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் 2.0 படத்திற்கு விநியோகஸ்தர்கள் மூலமாக அட்வான்ஸ் மற்றும் மினிமம் கேரண்டி வகையில் கிடைக்கப்போகும் தொகை 235 கோடி. இந்த அட்வான்ஸ் தொகை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால் சுமார் 450 கோடி ரூபாய் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலாக வேண்டும்.
Discussion about this post